உணவு பாதுகாப்பு துறை சார்பில் அயோடின் தின விழிப்புணர்வு

கடத்தூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்றஅயோடின் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அயோடின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.;

Update: 2023-10-22 12:48 GMT

உலக அயோடின் குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி 

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, வழிகாட்டலின்படி, மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், தலைமையில் கடத்தூர் நகர வணிகர் சங்க தலைவர் கண்ணப்பன், செயலாளர் பன்னீர் செல்வம், பொருளாளர் சந்தோஸ் முன்னிலையில் உலக அயோடின் குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் கூறுகையில், அயோடின் சத்து மனிதர்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அயோடின் சத்து குறைபாட்டால், மூளை வளர்ச்சி குறைபாடு, மாலைக்கண் நோய், தைராய்டு, பெண்களின் கர்ப்பகால குறைபாடு, வளர்சிதை மாற்ற கோளாறு, மாணவர்கள் நினைவாற்றல் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட ஏதுவாகிறது. அதை தவிர்க்கும் பொருட்டு உப்புகளில் அயோடின் செறிவூட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என கூறினார்

மேலும் உணவு வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள், மளிகை கடை வியாபாரிகள், அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உப்பில் அயோடின் உள்ளதா என கவனித்து விற்பனை செய்யவும், அதில் சிரிக்கும் சூரியன் லோகோ உள்ளதா எனவும் பார்வையிட்டு வாங்குவதுடன், தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி உள்ளிட்டவற்றை கண்காணித்து விற்பனை செய்ய விழிப்புணர்வு செய்யப்பட்டது.

நிகழ்வில் அயோடின் உள்ள உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அறியும் வகையில் பலவிதமான உப்பு பாக்கெட்டுகள் கொண்டு நேரடி செயல் விளக்கம் அளித்தனர். உணவில் அயோடின் கலந்த உப்பினை மட்டும் பயன்படுத்துவோம். அயோடின் பற்றாக்குறைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் அனைவரும் துணை நிற்போம் என பங்கேற்ற அனைவரும் உறுதி மொழி ஏற்று கொண்டனர்.

நிகழ்ச்சியில் வணிகர் சங்கப் பிரதிநிதிகள், மளிகை, உணவக, பேக்கரி, கார இனிப்பு விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News