தொலைதொடர்பு இல்லாத மலைப்பகுதியில் செல்போன் டவர் :கலெக்டர் துவக்கம்
கலசப்பாடி - அக்கரைகாடு மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய செல்போன் டவரை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி ஊராட்சியில் இதுவரை தொலைத்தொடர்பு சேவையே இல்லாத மலை கிராமமான கலசப்பாடி - அக்கரைகாடு மலைப்பகுதியில் மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக தனியார் (ஜியோ டெலிபோன் டவர்) தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு, தொலைத்தொடர்பு சேவை தொடக்க விழா நேற்று (10.11.2022) நடைபெற்றது. இவ்விழாவிற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையேற்று, மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட தனியார் (ஜியோ டெலிபோன் டவர்) தொலைத்தொடர்பு கோபுரம் - தொலைத்தொடர்பு சேவையினை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், தமிழக முதல்வர் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றிட வேண்டுமெனவும், மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், வாழ்க்கைத்தர உயர்விற்கும் அரசின் திட்டங்களை அம்மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தர உயர்விற்காகவும் முன்னுரிமை கொடுத்து அரசின் நலத்திட்டங்களும், அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைகிராமமான சித்தேரி ஊராட்சியில் உள்ள கலசப்பாடி - அக்கரைகாடு உள்ளிட்ட மலைகிராமங்களில் சாலை வசதிகள், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வசதி, உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைகிராமமான சித்தேரி ஊராட்சியில் உள்ள மலை கிராமமான கலசப்பாடி - அக்கரைகாடு மலைகிராமத்திற்கு இன்று மிகுந்த சவாலான, கரடுமுரடான மலைப்பாதையில் கடந்து வந்துள்ளதும், இங்கு வந்து மலைவாழ் மக்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் மக்களின் மனம் நேர்மையாக இருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இருப்பதாக தெரிவித்தார்கள். இந்த மலைக்கிராமத்தை இந்தியாவே அறியும் வகையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தனது முதல் கன்னி பேச்சிலேயே இம்மலைகிராமத்தை குறிப்பிட்டு பேசியுள்ளதாகவும், அந்த கன்னிப்பேச்சில் இந்த மலைகிராமத்திற்கு சாலை வசதியும், தொலைத்தொடர்பு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டுமென்று குறிப்பிட்டதாக இங்கு தெரிவித்தார்கள். இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.
இந்த மலைக்கிராமத்திற்கு இந்திய சுதந்திரம் அடைந்து 75-ஆம் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை கொண்டாடிடும் வேலையில் இம்மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தக்கூடிய தொலைத்தொடர்பு சேவை இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டு, இம்மலைவாழ் மக்களின் முதல் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தனியார் (ஜியோ டெலிபோன் டவர்) தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு, இத்தொலைத்தொடர்பு சேவை இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு வாழும் மக்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் கைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதியும், வாய்ப்பும் இந்த சித்தேரி ஊராட்சியில் உள்ள மலை கிராமமான கலசப்பாடி - அக்கரைகாடு மலைகிராம மக்களுக்கு இன்று முதல் கிடைத்துள்ளது. இத்தகைய தொலைத்தொடர்பு சேவையினை அமைத்து கொடுத்த தனியார் (ஜியோ) நிறுவனத்திற்கும், இந்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொலைத் தொடர்பு உலகத்தில் நாம் வாழ்ந்து வருகின்ற இச்சூழலில் கூட ஒரு தொலைத்தொடர்புமே இல்லாத ஒரு கிராமம் இருப்பது மிகவும் வேதனையான ஒன்றாகும். இதனால் மருத்துவ உதவி போன்ற அவசர தேவைகளுக்கு மக்கள் தொடர்பு கொள்ள இயலாத நிலை இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது இந்த தொலைத்தொடர்பு சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால் இந்த மலைக்கிராமத்திலிருந்தே எங்கு வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் இத்தொலைத்தொடர்பு சேவையினை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சித்தேரி ஊராட்சி, கலசப்பாடி மலைக்கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அரசு பழங்குடியினர் நல உண்டி, உறைவிட உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயின்று வருகின்ற மாணவ, மாணவியர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சிறப்பான கல்வியை கற்பதற்கு இந்த தொலைத்தொடர்பு சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே தான், இங்கு நானே நேரில் வந்து மலைவாழ் மக்களுக்கும், இம்மலைப்பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கும் பெரிதும் பயன்பெறக்கூடிய இந்த தொலைத்தொடர்பு சேவையினை தொடங்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மக்களும், மாணவ, மாணவியர்களும் இத்தொலைத் தொடர்பு சேவையினை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுவரை இல்லாத தொலைத்தொடர்பு சேவை கிடைத்து விட்டதே என்று மாணவ, மாணவியர்கள் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. சிறந்த கல்வியே எதிர்கால வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும் என்பதை மனதில் பதியவைத்து கொண்டு, இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்களும் இத்தொலைத்தொடர்பு சேவையினை பயன்படுத்தி சிறந்த கல்வியை கற்றிட வேண்டும்.
மேலும், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி ஊராட்சியில் உள்ள மலை கிராமமான கலசப்பாடி - அக்கரைகாடு மலைக்கிராமமானது வாச்சாத்தியிலிருந்து வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பகுதிகளை கடந்து அரசநத்தம் வழியாக சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியினர் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த சித்தேரி ஊராட்சி 62 குக்கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்ககூடிய ஊராட்சி ஆகும். இதில் கலசப்பாடி, அக்கரைக்காடு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கலசப்பாடி, அக்கரைக்காடு மலைக்கிராமங்களில் மட்டும் சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இம்மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி வேண்டும் என்பது தான். அந்த சாலைவசதியும் நிச்சயம் விரைவில் அமையும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டுள்ளது. வாச்சாத்தியிலிருந்து அரசநத்தம் வழியாக கலசப்பாடி மலைக்கிராமத்திற்கு சாலை வசதி அமைப்பதற்கு சுமார் 8 கி.மீ தொலைவும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இச்சாலை அமைக்க வனத்துறையின் அனுமதி பெறுவதற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டு, ஒன்றிய அரசில் கோப்பு கடைசி கட்ட நிலையில் உள்ளது. மதிப்பிற்குரிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இதுகுறித்து மத்திய வனத்துறையின் அனுமதி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டு, அனுமதி பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். எனவே, வனத்துறையின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் இச்சாலை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்படும். இதுவரை சாலை வசதியே இல்லாத இந்த மலைக்கிராமத்திற்கு விரைவில் சாலை வசதி அமையும் வாய்ப்பு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி ஊராட்சி, கலசப்பாடி மலைக்கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அரசு பழங்குடியினர் நல உண்டி, உறைவிட உயர்நிலைப்பள்ளியினையும், இப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.