ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் (௨ம் தேதி) வரை நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி இருந்த நிலையில், நேற்று நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3,367 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4,421 கனஅடியாக அதிகரித்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 38.19 அடியாகவும், நீர்இருப்பு 11.17 டிஎம்சியாகவும் இருந்தது.