தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வன்முறை அதிகரிக்கும் என்பது வரலாறு: பிரேமலதா விஜயகாந்த்
பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளை நிறைய திறந்து வைத்து போதை பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது என குற்றச்சாட்டு
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தர்மபுரிக்கு இன்று வருகை தந்த தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தான் ஆளுநர்மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. குடியரசுத்தலைவர் தமிழகம் வருகையின்போது நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சட்டம் ஒழுங்கு நிலைமையை கேள்விக்குறியாகி உள்ளது. இது கண்டனத்துக்குரியது.
தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை கொண்டு வருவார்கள் என்பது வரலாறு. ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்கவும், அதனை தடுப்பதும் தமிழக அரசின் கடமை.
திராவிடம் என்பது பொய், தவறான விஷயம், திராவிடம் இல்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது, திராவிடம் என்பது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழகம் ஆகிய 4 மாநிலங்களுக்கு பொதுவானது. நாடாளுமன்ற தேர்தலுக்காக யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஜனவரி மாதம் உரிய அறிவிப்பு கட்சி தலைமை முறையான அறிவிப்பு வெளியிடும்.
தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேறவில்லை 10 சதவீதம் தான் நிறைவேற்றி உள்ளனர். பெண்களுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தில் பல்வேறு குளறுபடி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்று கூறினர். அதுகுறித்தும் எந்த அறிவிப்பு இல்லை.
டாஸ்மாக் கடைகளை நிறைய திறந்து வைத்து போதை பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் அரசு எடுக்கவில்லை.
"நீட்" ஒட்டுமொத்த மாணவர்களையும் தி.மு.க. குழப்பி விடுகிறது. நீட் இந்தியாவிற்கு பொதுவானது. நீட்டை ஒழிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியும் நீட் விலக்குக்கு உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்தினாலும் எடுபடாது. அரசியல் செய்வதற்காக இந்த வேலையை செய்கின்றனர் என்று மாணவர்கள் தெளிவாகி விட்டனர். மாணவர்கள் குழம்பி போகாமல் எந்தவொரு தேர்வை அறிவித்தாலும், அதில் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவராக வேண்டும் என்றும் தே.மு.தி.க. சார்பில் கேட்டு கொள்கிறோம்.
நீட் என்பது வேறு, ஜூரோ மார்க் என்பது வேறு. நம்மை விட பின்தங்கிய மாநிலங்களில் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. அரசியல் லாபத்திற்காக நீட்டை எதிர்ப்பது மாணவர்களை தவறான பாதையில் வழி நடத்தி செல்வதாகும்.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள போனஸ் குறித்து போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு திருப்தி கிடையாது. 40 சதவீதம் வரை போனஸ் உயர்த்தி தர வேண்டும் என்று போக்குவரத்து துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கும் முயற்சி ஆபத்தானது.
காவிரி உபரிநீர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டில் எவ்வளவு பிரச்சனை உள்ளது. அதற்கு தீர்வு காணாமல், தி.மு.க. அரசு செய்யும் தவறுகளை மறைப்பதற்காக சாதனத்தை பற்றி பேசி வருகின்றனர். வாக்கு வங்கி சரிந்து வருகிறது என்பது தே.மு.தி.க.விற்கு மட்டுமல்லாமல், தேர்தல் நேரங்களில் அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகளும் பெரிய தோல்விகளை சந்தித்து உள்ளன. தே.மு.தி.க. அபாரமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று கூறினார்.