தர்மபுரி விவசாயிகளின் உளுந்து, பச்சைப்பயறு நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல்

தர்மபுரி விவசாயிகளின் உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஆகியவை மத்திய அரசின் நாபெட் (NAFED) நிறுவனம் மூலமாக கொள்முதல் செய்யப்பட உள்ளது.

Update: 2022-10-18 16:24 GMT

பச்சைப்பயறு

விவசாயிகளின் விளைபொருட்களான உளுந்து மற்றும் பச்சைப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஆகியவை மத்திய அரசின் நாபெட் (NAFED) நிறுவனம் மூலமாக கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக உளுந்து 340 மெ.டன் மற்றும் பச்சைப்பயறு 280மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கொள்முதல் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உருந்து மற்றும் பச்சைப்பயறு விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர்  சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்து மற்றும் பச்சைப்பயறு விளைபொருட்களை மத்திய அரசின் நாபெட் (NAFED) நிறுவனம் மூலமாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக உளுந்து 340 மெடன் மற்றும் பச்சைப்பயறு 280 மெடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது உளுந்து விலை 1 கிலோ ரூ.57/- முதல் ரூ.65/- வரையும், பச்சைப்பயறு விலை 1 கிலோ ரூ.60/- முதல் ரூ.75/- வரையும் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து விலை 1 கிலோ ரூ.66/-ற்கும், பச்சைபயறு விலை 1 கிலோ ரூ.77.55/-ற்கும் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் அரூர் மற்றும் பாலக்கோடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும், பச்சைப்பயறு கொள்முதல் தருமபுரி மற்றும் பென்னாகரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் மேற்குறிப்பிட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

உருந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் 01.10.2022 முதல் தொடங்கி 29.12.2022 வரையிலான காலம் வரை நடைபெற உள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு விளைபொருட்களுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு உளுந்து மற்றும் பச்சைப்பயறு விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  சாந்தி  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News