தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைக்கும் கொள்ளையர்கள்

தர்மபுரியில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைக்கும் கொள்ளை கும்பலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-10-18 16:17 GMT

திருப்பூரில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 30 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கடந்த மாதம் 25 ந்தேதி பெங்களூரில் இருந்து கோவையை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் 5 கிலோ தங்கத்தை எடுத்து கொண்டு காரில் ஊழியர்களுடன் வந்தார்.

அப்போது அவர் பெங்க ளூரு- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பூலப்பட்டி அருகே அவரை வழிமறித்த கொள்ளை கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி 5 கிலோ தங்கத்தை சொகுசு காருடன் கடத்தி சென்றனர்.

அதே போல காரிமங்கலம் அருகேயுள்ள பெரியம்பட்டியில் உள்ள பெருமாள்- பச்சையம்மன் கோவில்களில் உண்டியல் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் புகுந்து தலைமையாசிரியர் அறையின் கதவின் பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய கணினியை திருடி சென்றனர்.

அதே போன்று பாப்பாரப்பட்டி காவல்நிலையத்துக்கு அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தூரத்து உறவினர் என்று சொல்லி நைசாக பேசிய பெண் ஒருவர் ஆப்பிள் பழத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து வீட்டில் பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.

ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் உறவினர் என்று வந்த மர்ம நபர் ஒருவர் அவர் வீட்டுக்கு சென்று அவருக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கலியை பறித்து சென்றார்.

அதே போன்று பிடமனேரி பகுதியில் மோகன் மேஸ்திரி காலனியில் கடந்த 14ம் தேதி லோகநாதன் என்பவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று தர்மபுரி- ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரில் சீனிவாசன் என்பவர் வீட்டில் அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை திரு்டி சென்று உள்ளனார்.

கடந்த 2 மாதங்களில் தர்மபுரியில் நடந்து வரும் தொடர் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கொள்ளையர்கள் ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் உள்ள பூட்டிய வீடுகள் மற்றும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைத்தே கைவரிசையை காட்டி வருகின்றனர்.

5 கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுவரை இதில் எவரும் கைது செய்யப்படவில்லை.

தர்மபுரியில் தொடர்ந்து நடந்து வரும் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களால் பொது மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. வீட்டில் தனியாக இருக்கவும், வீடுகளை பூட்டிவிட்டு வெளியே செல்லவும் அஞ்சுகின்றனர்.

எனவே காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News