மாரண்டஅள்ளியில் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறையினர் 2 உணவகங்களுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Update: 2023-10-06 15:22 GMT

மாரண்டஅள்ளியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்த காட்சி.

தர்மபுரி மாவட்டம், மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக உணவு பாதுகாப்பு துறையினர் பல்வேறு உணவகங்களில் உணவு தரமாக உள்ளதா என ஆய்வு நடத்தி வருகின்றனர்

குறிப்பாக கிரில்டு சிக்கன், தந்தூரி சிக்கன், இறைச்சி மற்றும் சமையல் எண்ணெய், சட்டினி, மோர் உள்ளிட்டவை தரமாக உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ். மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட மாரண்டஅள்ளி மற்றும் வெள்ளி சந்தை பகுதிகளில் உள்ள சைவ, அசைவ உணவகங்கள் மற்றும் துரித உணவு கடைகளில் திடீர் ஆய்வு செய்தார்.

ஆய்வில் ஒரு உணவகத்தில் சமைத்த சாதம் குளிர்பதன பெட்டியில் ஒரு வாளியில் வைத்திருந்தது கண்டு அவற்றை அப்புறப்படுத்தி அவர்களை எச்சரித்தனர். மேலும் ஒரு உணவகத்தில் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி, தரம் குறைவான மோர் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 2 உணவகங்களுக்கும் தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

உரிமம் பெறாத இரண்டு புதிய உணவகங்களுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கினார். ஒருமுறை பயன்படுத்தி மீதமாகும் எண்ணெயை உணவு பாதுகாப்புத்துறை அங்கீகாரம் பெற்ற, மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெய் ரூகோ டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ள விழிப்புணர்வு செய்தார்.

உணவகங்களில் சுத்தம், சுகாதாரம் கடைபிடிக்கவும் உணவு கையாளும் பணியாளர்கள் தன் சுத்தம் மற்றும் உரிய உடைகள், உறைகள் அணிந்திருத்தல் வேண்டும். உணவகங்களில் ஈக்கள், பூச்சிகள், எலிகள் வராமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் மற்றும் சமைத்த உணவுகள் மூடிய நிலையில் பராமரிக்கவும், தேவையற்ற செயற்கை நிறமூட்டிகள் சேர்ப்பதோ நாள் பட்ட இறைச்சி பயன்படுத்துவது தவிர்த்தல் அவசியம் எனவும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றவும் தவறும் பட்சத்தில் சட்ட விதிகள் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.

ஆய்வில் பெட்டி கடைகள் மற்றும் பலகார கடைகளிலும் ஆய்வு செய்தார். பலகார கடைகளில் அச்சிடப்பட்ட காகிதங்களில் எண்ணெய் பலகாரங்களை காட்சிப்படுத்துவதோ, விநியோகப்பதோ, பொட்டலமிடுதலோ கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கண்டறியப்பட்டால் உடனடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

Tags:    

Similar News