பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பருவ பயிர்களை காப்பீடு செய்ய தர்மபுரி வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி வட்டாரத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு 2023-24 பருவத்திற்கான நெல் மற்றும் பருத்தி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.
குறுவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்ட பயிர்களை சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதி யானவர்கள். பயிர் கடன் பெறும் விவசாயிகளும் இதில் சேர்த்து க்கொள்ளபடுவர். மற்ற விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் சேரலாம்.
விதைப்பு தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், பயிரிட அபாயம் ஏற்படும் சூழ்நிலையில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர்காலத்தில் பயிர் இழப்பு, அறுவடைக்குப்பின் ஏற்படும் மகசூல் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடற்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவற்றிற்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
எனவே நெல் (சம்பா பருவம்) மற்றும் பருத்தி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பெருமளவில் சேர்ந்து பயனடையமாறு நல்லம்பள்ளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தேன்மொழி தெரிவித்துள்ளார்.