தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு
தருமபுரி மாவட்டம் முழுக்க பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்
தருமபுரி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத் திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு கடந்த 10-ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பின்போது கண்டறியப்படும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவ, மாணவியரின் விவரங்கள் சேகரிக்கப்படுவதுடன் உடனுக்குடன் அவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கும் பணிகளும் நடந்து வருகிறது.
நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட மிட்டாரெட்டி அள்ளி, லளிகம், கோம்பேரி கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6 மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களை லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கும் நிகழ்வு நேற்று நடந்தது. தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வின்போது 2 மாணவர்கள் பத்தாம் வகுப்பிலும், 3 மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பிலும், 1 மாணவர் 6-ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட கல்வி அலுவலர்(பயிற்சி) திருநாவுக்கரசு, லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாசன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட உதவி திட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
அதேபோல, காரிமங்கலம் ஒன்றியத்தில் பைசு அள்ளி ஊராட்சி குண்டல அள்ளி அரசுப் பள்ளி பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் 8 மாணவ, மாணவியர் கண்டறியப்பட்டனர். இவர்களில் 4 மாணவர்கள் உடனடியாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இதர 4 மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியின்போது, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதுரைவீரன், முல்லைவேந்தன், பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், ஆசிரியர் பயிற்றுநர் பரிதா பானு, பைசு அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இதுதவிர, பாலக்கோடு ஒன்றியத்தில் தண்டுகாரன அள்ளி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன், மேற்பார்வையாளர் சுகுணா, தலைமை ஆசிரியர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைப்போலவே, மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்புப் பணிகளில் கல்வித்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்