தர்மபுரியில் நவ.17 கல்வி கடன் வழங்கும் விழா: ஆட்சியர் சாந்தி தகவல்
தர்மபுரியில் நடைபெறும் கல்வி கடன் வழங்கும் விழாவில் மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்;
தர்மபுரியில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் விழா வருகிற 17ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி பிரதான சாலை குண்டலப்பட்டியில் இயங்கி வரும் வருவான் வடிவேலன் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் வருகிற 17.11.2023-ம் தேதியன்று காலை 10 மணி முதல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
விழாவில் வங்கியாளர்களும், அரசு அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
கல்லூரியில் படித்து வரும் தர்மபுரி மாவட்ட இளங்கலை மற்றும் முதுகலை சார்ந்த முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இம்மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டு வெளி மாவட்டத்தில் மற்றும் மாநிலத்தில் பயிலும் மாண வர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், நர்சிங், பர்மஸி, கலை மற்றும் அறிவியல், கல்வியியல் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்விணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், கல்லூரி சேர்க்கை கடிதம், நன்னடத்தை சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், போன்ற ஆவணங்கள் அளிக்க வேண்டும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்விக் கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்