இரட்டை பாதையாகும் ஒசூா்-தர்மபுரி-ஒமலூா் ரயில்பாதை

ஒசூரிலிருந்து தர்மபுரி வழியாக ஓமலூா் வரையிலான ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்ற மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது;

Update: 2024-02-04 04:17 GMT

கோப்புப்படம் 

சேலம்- தர்மபுரி-பெங்களூரு ரயில்பாதை, நாட்டு விடுதலைக்குப் பிறகும் ஆண்டுகள் பல கடந்து இன்று வரை ஒருவழிப் பாதையாகவே தொடா்கிறது. இந்தப் பாதையில்தான் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் அனைத்தும் கடந்து செல்ல வேண்டும்.

பெங்களூரிலிருந்து ஒசூா் வரையிலும், அதேபோல ஒசூரிலிருந்து தர்மபுரி வழியாக ஓமலூா் வரையிலுமான இந்த ரயில் பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மின் வழிப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டது.

மயிலாடுதுறை- மைசூரு, தூத்துக்குடி- மைசூரு, கண்ணனூா்- யஷ்வந்த்பூா், நாகா்கோவில்- பெங்களூரு, சேலம்- யஷ்வந்த்பூா், எா்ணாகுளம்- பெங்களூரு, காரைக்கால்- பெங்களூரு ஆகிய விரைவு ரயில்களும், தர்மபுரியிலிருந்து பெங்களூருக்கு பயணிகள் ரயில் ஒன்றும் நாள்தோறும் சென்று வருகின்றன..

இவை தவிர, திருநெல்வேலி- ஜதாத், புதுச்சேரி- யஷ்வந்த்பூா், கொச்சுவேலி-யஷ்வந்த்பூா், ராமேஸ்வரம்- ஹுப்பள்ளி ஆகிய வாராந்திர ரயில்களும் தர்மபுரி வழியாகக் கடந்து செல்கின்றன.

ஒருவழிப் பாதை மட்டுமே உள்ளதால், கா்நாடகத்திலிருந்து தமிழகம், கேரளத்துக்கு இந்தப் பாதை வழியாக செல்லும் ரயில்கள், மறுமார்க்கத்தில் விரைவு ரயில் வரும் காலங்களில் அந்த ரயில் கடந்த செல்லும் வரை இணைப்புப் பாதையில் (லூப் லைன்) நிறுத்தி வைக்கப்படும். அதன்பின் சிக்னல் கிடைத்த பிறகே அந்த ரயில்கள் மீண்டும் புறப்படும். இதுபோன்ற சூழலில், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்படுகிறது. இதனால், பயணிகள் குறித்த நேரத்தில் தங்களது இடங்களைச் சென்றடைய இயலாத நிலை ஏற்படுகிறது.

ரயில் பயணத்தில் இத்தகைய இடா்களைக் களைய, பெங்களூரிலிருந்து சேலம் வரையிலான தற்போதுள்ள ஒருவழி ரயில்பாதையை இருவழிப் பாதையாக மாற்றியமைத்து விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதுதொடா்பாக தென்மேற்கு ரயில்வே துறைக்கு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.

கடந்த பிப். 1-ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. இதில், ரயில்வே துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிதிநிலை அறிக்கையில், ‘தென்மேற்கு ரயில்வே துறையில் இடம்பெற்றுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து தர்மபுரி வழியாக சேலம் மாவட்டம், ஓமலூா் வரையிலான ரயில்பாதை இருவழிப் பாதையாக ரூ.100 கோடியில் மாற்றி அமைக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெங்களூரு பையப்பனஅள்ளியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வரையிலான ரயில்பாதை ரூ.150 கோடியில் இருவழிப் பாதையாக மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விரு அறிவிப்புகளின் மூலம், பெங்களூரு- பையப்பனஅள்ளியிலிருந்து ஒசூா் வரையிலும், இதைத் தொடா்ந்து ஒசூரிலிருந்து தர்மபுரி வழியாக ஓமலூா் வரையிலும் ஒருவழி ரயில்பாதைகள் விரைவில் இருவழிப் பாதைகளாக மாற்றியமைக்கப்பட உள்ளன.

இது தொடா்பாக தர்மபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் செந்தில்குமார் கூறுகையில் ஒசூரில் இருந்து தர்மபுரி வழியாக ஓமலூா் வரையிலான ரயில்பாதை ஏற்கெனவே மின் பாதையாக அண்மையில் மாற்றப்பட்டது. இதன்காரணமாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் போக்குவரத்தும் தொடங்கி உள்ளது.

ரயில் பயணத்தில் நிகழும் காலவிரயத்தைத் தவிர்த்து போக்குவரத்தை மேம்படுத்த, இந்த ரயில்பாதையை இருவழிப் பாதையாக விரிவுபடுத்த வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன்படி, தற்போது ரூ. 100 கோடியில் ஒசூரிலிருந்து தர்மபுரி வழியாக ஓமலூா் வரை இருவழிப் பாதையாக மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி. இத்திட்டத்தை விரைந்து நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News