மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனடி தீர்வு காண தர்மபுரி ஆட்சியர் உத்தரவு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படுகின்ற மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனடி தீர்வு காண வேண்டும் என தர்மபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது.
இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், ஆக்கரமிப்புகள் அகற்றுதல், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு , வீட்டுமனை பட்டா, புதிய வீடு, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வி.கே.சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் ) அ.மாலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.