இரண்டாவது நாளாக நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்;

Update: 2023-11-22 11:49 GMT

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் 

தர்மபுரி நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட த்தில் நேற்று காலை முதல் இரவு கடும் குளிரிலும் , மழையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் நிரந்தர பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

இதில் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் (சரம் எனர்வோ) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் என 106 பேர் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு இ எஸ், பி.எப், பிடித்தம் போக 315 ரூபாய் தின கூலியாக வழங்கப்படுகிறது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் பற்றாக்குறை என்பதால் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். என உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழ்நாடு உள்துறை தலைமைச் செயலாளர் சிவராம் ஐ.ஏ.எஸ். ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக 610 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்துறை தலைமைச் செயலாளர் சிவராமன் ஐ.ஏ.எஸ், ஆணையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தர்மபுரி நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் நேற்று காலை முதல் இன்றும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆணை கடந்த மாதம் 27 ந்தேதி அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தர்மபுரி ஒப்பந்த ஊழியர்களுக்கு உள்துறை செயலாளர் ஆணையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

அதற்கு நகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக தர்மபுரி நகராட்சியில் உள்ள 106 ஒப்பந்த ஊழியர்களும்  மூன்று அம்ச கோரிக்கைகளான உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 610 ரூபாய் வழங்க வேண்டும்.

மேலும் தீபாவளி போனஸ் ஆக ரூபாய் 7000 வழங்க வேண்டும். தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எஃப் மற்றும் இதர பணத்தை உரிய அலுவலகத்தில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவிலும் அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இரவு வீசிய குளிரிலும், அதிகாலை பெய்த மழையிலும் நனைந்தபடி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News