கூட்டுறவு வார விழா: ரூ.15.36 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தர்மபுரி ஆட்சியர் வழங்கினார்;
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளியில் உள்ள தனியார் மஹாலில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவில் ஆட்சியர் சாந்தி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், 1915 பயனாளிகளுக்கு ரூ.15.36 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறுகையில், 70-வது அகில இந்தியக் கூட்டுறவு வாரவிழா முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் 523 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத் தின் கீழ் 498 முழுநேர நியாய விலைக்கடைகளும், 586 பகுதிநேர நியாய விலைக் கடைகளும் என ஆக மொத்தம் 1084 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நியாய விலைக் கடை களில் 4,68,364 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியன விநியோ கிக்கப்பட்டு வருகிறது.
2022-23-ஆம் நிதியாண்டில் 61,405 விவசாயிகளுக்கு ரூ.499.95 கோடி பயிர்க்கடன் வழங்க ப்பட்டுள்ளது. பயிர்க்கடன் உட்பட இதர கடன்கள் 1,89,458 நபர்களுக்கு ரூ.1464.15 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 28,159 விவசாயிகளுக்கு ரூ.251.21 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் உட்பட இதர கடன்கள் 1,16,332 நபர்களுக்கு ரூ.936.35 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வட்டி யில்லா பயிர்க்கடன்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிர்க்கடனை தவணை தவறாது திரும்ப செலுத்துபவர்களுக்கு 7% வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி னார்.
மேலும், இன்று நடைபெற்ற 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவில் 922 நபர்களுக்கு பயிர்க்கடனாக ரூ.774.46 இலட்சமும், கால்நடை பராமரிப்பு கடன் 303 நபர்களுக்கு ரூ.131.18 இலட்சமும், 34 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 523 பயனாளிகளுக்கு ரூ.464.11 இலட்சமும், மாற்றுத் திறனாளி கடன்கள் 54 நபர்களுக்கு ரூ.27.71 இலட்சமும், டாம்கோ தனி நபர் கடனாக 34 நபர்களுக்கு ரூ.23.18 இலட்சமும், டாம்கோ குழுக் கடனாக 71 நபர்களுக்கு ரூ.38.66 இலட்சம், வீடு அடமானக் கடன் 8 நபர்களுக்கு ரூ.77.50 இலட்சமும் ஆக மொத்தம் இவ்விழாவில் 1915 உறுப்பினர்களுக்கு ரூ.15.36 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினார்.
இவ்விழாவில் பென்னா கரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.