தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பாதிப்பு : ஆட்சியர் ஆய்வு
மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க மருத்துவமனையில் 100 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவும் மருத்துவமனையில் 100 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இதனை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்குவிற்கு உடனடி சிகிச்சை மேற்கொள்வதற்கு அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் 60 படுகைகள் கொண்ட வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் குறைந்த அளவிலான டெங்கு பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. டெங்கு பாதிப்பினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் உள்ள குடிநீர் தொட்டிகள் முழுவதும் குளோரினைக்ஷேசன் பணி மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு களப்பணியாளர்கள், மூலம் மருந்து தெளித்தல், கொசுப் புகை மருந்து அடிக்கும் பணிகள் செயல்படுத்தவும், காய்ச்சல் உள்ள பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உடைந்த பொருள்களை பயன்ப டுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக ்கொள்ளப்ப டுகிறார்கள். உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் மழைநீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகும். இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவகூடும். எனவே பொதுமக்கள் தங்களது வீட்டில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழித்து சுற்றுபுறத்தை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
மேலும் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடரை கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும். பிடித்த தண்ணீரை காற்று புகாவண்ணம் துணிகளைக்கொண்டு கட்டி மூடி வைக்க வேண்டும்.
டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, உரல், ஆட்டுக்கல் போன்ற வீட்டில் உபயோகப்படாத பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்றிட வேண்டும். சுகாதாரபணியாளர்கள் வரும்பொழுது வீட்டின் உட்புறம் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
மேலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். இதைத் தவிர்த்து எக்காரணம் கொண்டும் அருகில் உள்ள மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
மருத்துவர்களின் ஆலோசனை இன்றி தாமாக எந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் உடல் நலம் பாதிக்கப்படும். என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரமேஷ் பாபு, உள்ளிருப்பு மருத்து அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.