தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10கோடி மதிப்பிலான கட்டிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30.9.2021) தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
மேலும், பள்ளிக்கல்வித் துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 17 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 11 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.