சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி: வனத்துறையினர் எச்சரிக்கை

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

Update: 2023-12-09 15:06 GMT

சிறுத்தை நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர் 

தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே உள்ள புதூர் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சிறுத்தைகள் இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.

அந்த வீடியோவில் சிறுத்தை புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது. இதை அறிந்த கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் மற்றும் வனத்துறையினர் புதூர் கிராமத்திற்கு விரைந்து சென்று சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.

அதில் சிறுத்தை ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

சிறுத்தை பிடிபடும் வரை பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாட வேண்டாம் எனவும், குறிப்பாக குழந்தைகளை வெளியில் விளையாட விட வேண்டாம் என்றும் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என கூறி பொதுமக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்த அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News