செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

தர்மபுரி உழவர் சந்தையில் செல்போன் திருடிய வாலிபரை கைது செய்த காவல்துறையினர், மேற்கு வங்கத்தில் இருந்து வேலையில்லாத வாலிபர்களை இதற்காக தயார்படுத்தி அனுப்புவதாக கூறினர்;

Update: 2023-07-29 14:29 GMT

உழவர் சந்தையில் செல்போன் திருட்டின் ஈடுபட்டு கைதான வடமாநில வாலிபர் ராகுல் 

தர்மபுரி உழவர் சந்தையில் அடிக்கடி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக காய்கறி வாங்கும் பொதுமக்கள் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்த வண்ணமாக இருந்தனர்.

இந்த நிலையில் உழவர் சந்தையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை கண்காணிக்க உழவர் மற்றும் வேளாண் துறை சார்பில் 3 பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தனர். அந்த கண்காணிப்பு குழு தொடர்ந்து உழவர் சந்தையை கண்காணித்து வந்தது. அப்போது ஒரு வாலிபர் தினமும் கையில் பையை வைத்து கொண்டு காய்கறி வாங்குவது போல் வாங்கி சென்று வந்தார்.

இந்த நிலையில் தர்மபுரியை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியரான விஜயகுமார் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்தார். அப்போது அவரது செல்போனை அந்த வாலிபர் திருடி சென்றார். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளாண் துறை குழுவினர் மற்றும் காய்கறி வியாபாரிகள் அந்த நபரை கையும், களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விஜயகுமார் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

செல்போன் திருடிய வாலிபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகுல் (வயது20) என்பது தெரியவந்தது. ராகுல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் மற்றும் நகை ஆகியவை திருடி அதில் வரும் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தது தெரியவந்தது.

இதேபோன்று தர்மபுரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசியல் கட்சி பிரமுகரின் விலையுர்ந்த செல்போன் ஒன்று மாயமானது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த செல்போன் ஐஎம்இஐ எண்ணை வைத்து டிராக் செய்தபோது அந்த செல்போனை திருடியவர் தர்மபுரியில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு பயணித்து, அதன்பின்னர் மேற்கு வங்கம் சென்றது தெரியவந்தது.

மேற்கு வங்கத்தில் இருந்து வேலையில்லாத வாலிபர்களை இதற்காக தயார்படுத்தி தமிழகத்திற்கு வந்து செல்போன், மோட்டார் சைக்கிள், ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணம் திருடுவது வாடிக்கையாக உள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து கைதான ராகுலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உழவர் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News