ஒகேனக்கல் மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்
ஒகேனக்கல் மலைப்பாதையில் சுற்றுலாகேப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு இன்று காலை சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த சுகாதாரத் துறையில் பணியாற்றும் அரசு மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், தங்களது குடும்பத்துடன் ஒகேனக்கல் பகுதியை நோக்கி சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் ஒகேனக்கல் வனப்பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, திடீரென மலைப்பாதையில் கவிழ்ந்தது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் பென்னாகரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் உடனடியாக பென்னாகரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 5 நபர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 35 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனிடையே, இந்த பேருந்து விபத்து காரணமாக ஒகேனக்கல் மலைப் பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.