தர்மபுரி அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து
ஆம்னி பேருந்து விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், லாரி பார்க்கிங் பகுதிக்கு அருகே தனியார் ஆம்னி பேருந்து விபத்தால் 20 பேர் காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூருவை நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை கேரளா மாநிலத்தைச் சேர்ந்த காசி (29) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை தர்மபுரி பென்னாகரம் பிரிவு சாலையில் அந்த ஆம்னி பேருந்து வந்தது. அப்போது அங்கு லாரி பார்க்கிங் அருகே வாகனங்கள் மெதுவாக கடந்து செல்வதற்காக சாலையி்ல் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு இருப்பதை கவனிக்காமல், வேகமாக வந்த ஆம்னி பேருந்து மோதியது.
இதில் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அதே இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். 13 பேர் லேசான காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து உடனே தர்மபுரி நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து விசாரித்ததில், விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ், ஜோசப், சுஜாதா, கீதா, மாளவிகா, எடிசன், ஹான்சன், ஆகிய 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநர் உள்பட 13 பேர் லேசான காயங்களுடன் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.