விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற லஞ்சம்: ஆட்சியரிடம் விவசாயி புகார் மனு
இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி மனு அளித்தார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரக்காசனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் விவசாயியான நான், அரக்காசனஅள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பிற்காக பெரும்பாலை மின்வாரியத்தில் அதிகாரியிடம் விண்ணப்பித்து இருந்ததாவும் கூறினார்.
ஆனால் அந்த அதிகாரி தனக்கு பிறகு விண்ணப்பங்கள் அளித்த அனைவருக்கும் பணம் பெற்றுக் கொண்டு இலவச மின் இணைப்பு கொடுத்தது தெரியவந்தது. தனது நிலத்திற்கு இதுவரை மின் இணைப்பு தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டபோது, இலவச மின் இணைப்புக்காக லஞ்சம் கேட்டார்.
அப்போது நான் விண்ணப்பத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்டு மேலும் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என்று அதிகாரி கூறினார். ஒரு மின் இணைப்பிற்கு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் மின் இணைப்பு வழங்குகிறார். மேலும் தனக்கு முக்கிய பிரமுகர்கள் ஆதரவு இருப்பதால் அதிகாரியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டி வருகிறார்.
எனவே இந்த மனுவை ஏற்று விசாரணை செய்து எனக்கு மின் இணைப்பு வழங்குமாறும், லஞ்சம் வாங்கும் மின்வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தி உடனே அங்கிருந்த மின்வாரிய அதிகாரியை அழைத்து விசாரிக்க உத்தர விட்டார்.