தர்மபுரி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை
தர்மபுரி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.;
தர்மபுரி சாலை விநாயகர் கோயில் தெருவில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலகம் மூன்று அடுக்கு மாடியில் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
மூன்று மாடி பிரிவு அலுவலகங்களிலும் தற்போது பத்திரப்பதிவு ஆன்லைன் மூலமே நடைபெற்று வருவதால் ரொக்கப் பணம் புழக்கத்திற்கு அங்கு இடமில்லை.
இந்நிலையில் தருமபுரி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தருமபுரி துணை காவல் கண்காணிப்பாளர் இம்மானுவேல் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் தர்மபுரி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டபோது அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ.55 ஆயிரம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டு சாார்பதிவாளர் லட்சுமிகாந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று மாலை அலுவலகம் முடியும் தருவாயில் அலுவலகத்திற்குச் சென்ற தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்றுவரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.