தருமபுரி மாவட்டத்தில் 480 பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் இடிப்பு
தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 480 பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி கூறினார்;
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத, பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென உத்திரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத, பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சீரமைக்கப்பட வேண்டிய பள்ளி கட்டங்கள், பள்ளி கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிக்கட்டடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க ஏதுவாக பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இக்குழுவைக் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் உள்ள அனைத்துக் கட்டடங்களின் உறுதித் தன்மையை சரிபார்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத, பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்கள் கண்டறியப்பட்டு மொத்தம் 480 பழைய கட்டிடங்கள், சிறு குடிநீர் தொட்டிகள், பள்ளி சுற்றுச்சுவர்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடித்து அப்புறப்பட்டுள்ளன.