தருமபுரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 398 மனுக்கள் அளிப்பு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று பெற்றுகொண்டார்.;
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, தலைமையில் இன்று (16.09.2024) நடைபெற்றது.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 398 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், போலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.விஜயன் என்பவரின் மகள் மோனிகா என்பவர் 23.10.2021 அன்று ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தமைக்காக, அவரது தந்தை விஜயன் என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற நிதியுதவித் தொகை ரூ.1,00,000/- த்திற்கான காசோலை மற்றும் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், சந்தப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ரகு என்பவரின் மகன் சஞ்சய்குமார் என்பவர் 18.05.2023 அன்று பாம்பு கடித்து இறந்தமைக்காக, அவரது தந்தை ரகு என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற நிதியுதவித் தொகை ரூ.1,00,000/- த்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் காதொலி கருவி வேண்டி மனு வழங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,500 மதிப்பிலான காதொலி கருவிகளையும், தாட்கோ மூலம் வெவ்வேறு திட்டப்பகுதியில் கட்டப்பட்டு வரும் 24 பயனாளிகளுக்கு ரூ.39.66 இலட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வழங்கினார்.
முன்னதாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி "சமூக நீதி நாள்" என்ற உறுதிமொழியினை வாசிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செம்மலை, மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செர்லின் ஏஞ்சலா, தாட்கோ உதவி மேலாளர் ரேவதி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் முருகதாசன், இளநிலைப் பொறியாளர் சிலம்பரசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.