தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் இரவு தக்காளி ஏற்றிச் சென்ற லாரி அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம் கோலாரில் இருந்து சிவகாசிக்கு தக்காளி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தர்மபுரி சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகாசியை சேர்ந்த பாலசுந்தரம் (35) என்பவர் ஓட்டி வந்தார். தொப்பூர் கணவாயில் செல்லும்பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் தர்மபுரியில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதியதில் லாரியும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதற்கு முன்னே கிருஷ்ணகிரியில் இருந்து கோவை சென்ற கார் மீது வேன் மோதியதில் கார் பாலத்தின் மீது மோதியது.
இதில் காரில் சென்ற மணிகண்டனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது இந்த கார் முன்னால் பெங்களூரில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியதில் அக்காரில் சென்ற பிரவீன் குமார் (40) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது வெள்ளக்கல்லில் இருந்து சேலத்திற்கு தக்காளி ஏற்றிச் சென்ற லாரி வாகனங்கள் மீது மோதியதில் ரோட்டில் கவிழ்ந்தது . இதனால் தர்மபுரி சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு தொப்பூர் போலீசார் விரைந்து வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி காயமடைந்தவர்களை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.