பெண்ணாடம் அருகே வாலிபர் அடித்து கொலை: போலீசார் விசாரணை

பெண்ணாடத்தில் 10 பேர் கொண்ட கும்பலால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார், அவரது நண்பர் கவலைக்கிடமாக உள்ளார்;

Update: 2022-04-13 03:13 GMT

பெண்ணாடம் அருகே கொலை செய்யப்பட்ட உதயராஜா

கூடலூர் கிராமத்தை சேர்ந்த சேதுராமன் என்பவரின் மகன் உதயராஜா(வயது 28), அவரது நண்பரான பெண்ணாடம் கருங்குழி தோப்பை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் ஆனந்தபாபு(30) என்பவருடன் பெண்ணாடம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது தொளார் கிராமத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டையுடன் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர்

அந்த கும்பல் திடீரென உதயராஜா, ஆனந்தபாபுவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் நிலை குலைந்து கீழே விழுந்து உள்ளனர். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள், அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பின்னர்அந்த கும்பல், இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றது.

இது பற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் காவல் துறையினர் விரைந்து வந்து ஆனந்தபாபு, உதயராஜா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உதயராஜா பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த ஆனந்தபாபு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தொளார் கிராமத்தை சேர்ந்த கும்பல் எதற்காக உதயராஜாவை அடித்துக் கொலை செய்தனர், அவரது நண்பர் மீதும் எதற்காக கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற விவரம் தெரியவில்லை. இந்த கொலை முன் பகை காரணமாக செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனபது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் இடையே கூடலூர் கிராம மக்களுக்கும், தொளார் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது ஆகையால் முன்னெச்சரிக்கையாக இரு கிராமங்களிலும் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News