கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி

கொரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கருப்பு பூஞ்சை நோய்க்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.;

Update: 2021-05-27 02:43 GMT

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் நோய்த் தொற்று குறையவில்லை. நோய்த்தொற்றும் அதிகரித்து வருகிறது, உயிரிழப்பும் குறையவில்லை.

இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.

சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). இவர் கடந்த 8-ந் தேதி சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோது சர்க்கரை நோய் அளவு அதிகரித்து அவரது கை, விரல், முகம் கருப்பாக மாறியது. கண் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் பண்ருட்டி தட்டாஞ்சாவடியை சேர்ந்த எழில்மணி மனைவி ராஜேஸ்வரி (54) என்பவர் கடந்த 10-ந் தேதி நோய்த்தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கியது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

வேப்பூரில் உள்ள ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (50) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவருக்கு சர்க்கரை நோய் அதிகரித்து முகம், கை, கால் கருப்பு நிறமாக மாறி, கண் வீக்கம் அதிகரித்தது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிந்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

Tags:    

Similar News