பண்ருட்டி அருகே யூடியூப் சேனல் பார்த்து சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது
பண்ருட்டி அருகே யூட்யூப் சேனலை பார்த்து சாராயம் காய்ச்சிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை;
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் காமாட்சிபேட்டை, நத்தம், திருவாமூர் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக தெரியவந்தது
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, கேஸ் ஸ்டவ்வில் குக்கர் வைத்து அதில் சிலிண்டர் டியூப் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நூதன முறையில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்து சாராயம் காய்ச்சியவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் காமாட்சிபட்டியை சேர்ந்த மணிகண்டன், சிவமணிகண்டன், நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயராமன், திருவாமூர் சேர்ந்த வெங்கடேசன், திரிமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. அவர்கள் யூடியூபில் வீட்டில் சாராயம் காய்ச்சுவது பற்றி பார்த்து காய்ச்சியதும் தெரியவந்தது.
காவல் துறையினர் அவர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.