பண்ருட்டி அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு வீடுகள் தீக்கிரை
பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த மனோகர். அவரது பக்கத்து வீட்டுக்காரர் அம்பிகா. திடீரென ஏற்பட்ட மின்கசிவால் காரணமாக இருவர் வீட்டுக்கூரைகளும் தீப்பிடித்து மளமளவென்று இரண்டு வீடுகளும் முழுமையாக எரிந்தது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன.
தீவிபத்து குறித்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பண்ருட்டி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு காவலர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். வீட்டின் கூரைகள் எரிந்து சேதம் அடைந்த அதில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான வீட்டின் உடைமைகள் தீயில் கருகி சேதம் அடைந்தன.
அப்பொழுது சற்றும் எதிர்பாராமல் தன் உயிரை துச்சமென நினைத்து தீயணைப்பு காவலர் சத்யராஜ் எரியும் வீட்டின் உள்ளே சென்று கேஸ் சிலிண்டரை வெளியே எடுத்து வந்ததால் மேலும் தீ விபத்து பரவாமல் தடுக்கப்பட்டது. சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்களால் தீயணைப்பு காவலர் சத்யராஜுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
மேலும் தீ விபத்து சம்பந்தமாக பண்ருட்டி போலீசார் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..