பண்ருட்டியில் தி.மு.க. அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

தி.மு.க. அரசை கண்டித்து பண்ருட்டி சாலையில் மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-14 15:21 GMT

பண்ருட்டியில் மாற்றுத்திறனாளிகள் தி.மு.க. அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்  இன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது. தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் மாவட்ட துணை தலைவர் இராசையன் , மாவட்ட இணைச் செயலாளர் ஜீவா ஆகியோர் தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது  தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கேரள மாநிலங்களில் வழங்கப்படுவது போல தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ 3000வழங்க வேண்டும் என்றும் கடும் ஊனமுற்றவர்களுக்கு மாத உதவித் தொகை ரூ. 5000 வழங்க வேண்டும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும்  கோஷங்களை எழுப்பினர்.இதனால் பண்ருட்டி- சென்னை , கும்பகோணம் , சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News