சாம்பல் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி: ஆத்திரத்தில் 5 லாரிகளுக்கு தீவைப்பு
நெய்வேலி என்எல்சியிலிருந்து சாம்பல் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலியானதால், ஆத்திரமடைந்த உறவினர்கள் 5லாரிகளுக்கு தீ வைத்தனர்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மேலக்குப்பம் கிராமத்தைச் கோவிந்தன். என்.எல்.சி.யில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி திலகவதியுடன் கோவிலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது சாம்பல் ஏற்றி வந்த லாரி மோதியதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். திலகவதி நெய்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை கேள்விப்பட்ட கோவிந்தனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆத்திரத்தின் உச்சத்தில் நான்கு லாரிகளை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இறந்துபோன கோவிந்தனின் உடலை விபத்து நடந்த பகுதியில் இருந்து எடுக்கவிடாமல் உறவினர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் சப் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சம்பவ இடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். என்எல்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்த உறவினர்கள் நிரந்தர வேலை கேட்டும், உரிய இழப்பீடு கேட்டும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு பேச்சுவார்த்தை முடிவில், விபத்தில் இறந்த போன கோவிந்தனின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு நிரந்தர வேலையும், இழப்பீடு தொகை வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டதால், உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
சாம்பல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்தில் ஒருவர் பலியான சம்பவமும், அதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உறவினர்கள் 5 லாரியை கொளுத்தியது நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. லாரி தீயிட்டு கொளுத்திய சம்பவத்தில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.