நெய்வேலியில் இரண்டு வயது குழந்தையை கடித்து குதறிய 4 தெரு நாய்கள்
நாய்கள் குழந்தையை கடித்துக் குதறியதில் அவருக்கு 60 தையலுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப், மெயின் பஜார் அருகே, கோல்டன் ஜூப்ளி பார்க் உள்ளது. கடந்த 22 ஆம் தேதி அன்று பூங்கா செயல்படாத நேரத்தில், அயனாஸ் என்ற இரண்டு வயது குழந்தையை, அவரது தாத்தா சேகர் என்பவர் அப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது குழந்தையை, பூங்காவில் விளையாட விட்டு, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்க சென்றபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த 4 தெருநாய்கள் ஒன்று சேர்ந்து குழந்தை அயனாஸ்யை கொடூரமாக கடித்துக் குதறியுள்ளன.
இதை அடுத்து, குழந்தை அயனாஸ் மீட்கப்பட்டு என்எல்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை உடல் முழுவதும் ஏறத்தாழ 60 க்கும் மேற்பட்ட தையல்கள், காயங்களுடன் குழந்தைக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
இதனிடையே, குழந்தையின் தாய் சமூக வலைதளங்களில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். குழந்தையை பூங்காக்கள் மற்றும் சாலை ஓரங்களில் தனியாக விடவேண்டாம் எனவும் தெருநாய்களை மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து அவர் வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.