கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வீடுகளுக்குள் புகுந்தது மழைநீர்
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்த மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகள், ஏரிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த பெரிய குறிச்சி பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
வீடுகளுக்குள் புகுந்த மழை நீரில் பாம்பு உள்ளிட்ட பூச்சி வகைகள் இருப்பதால் வெகு அச்சத்தோடு இருப்பதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் டெங்கு உள்ளிட்ட பல மர்ம காய்ச்சல்கள் குழந்தைகளுக்கு பரவுவதால் வீடுகளுக்குள் சூழ்ந்த மழை நீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தண்ணீர் வடிந்த பிறகு சுகாதாரத்துறை தொற்றுநோய் பரவாமல் இருக்க கிருமி நாசினிகளை தெளித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.