நெய்வேலியில் எலக்ட்ரிசியன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
நெய்வேலியில் எலக்ட்ரிசியன் வீட்டில் வீரமணி என்பவர் தலைமையில் சிலர் நள்ளிரவில் நாட்டு வெடி குண்டு வீசினார்கள்;
நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வீடு
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 21-ல் வசிப்பவர் ஜெயக்குமார் மகன் ஜெயபால். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று அதே பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர் தலைமையில் சிலர் நள்ளிரவில் நாட்டு வெடி குண்டு வீசினார்கள்.
இதுகுறித்து ஜெயபால் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை செய்ததில், வீரமணி மகன் சிவாவை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜெயபால் நண்பர் வெங்கடேசன் உள்பட 4 பேர் கொலை செய்தனர். இந்த வழக்கில் கொலையாளிகள் நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பிணையில் வெளிவந்த வெங்கடேசன், நேற்று ஜெயபாலுடன் துக்க நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததை பார்த்த வீரமணி ஆத்திரமடைந்து, நள்ளிரவில் தனது மகன் நண்பர்களுடன் ஜெயபால் வீட்டில் சென்று நாட்டு சணல் வெடி குண்டை வீசினார்கள் என்பது தெரியவந்தது.
அதன்பேரில் 21 வட்டத்தை சேர்ந்த கார்த்திக், ரமேஷ், தமிழரசன், எழிலரசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். வீரமணி, சத்தியமூர்த்தி, சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.