குறிஞ்சிப்பாடியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
குறிஞ்சிப்பாடி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி லட்சுமி தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சீதா, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் அனிதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுந்தரேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
டாக்டர்கள் அஸ்வின் ஜோதி, பிரகாஷ், நாகராஜன், தனலட்சுமி மற்றும் செவிலியர்கள் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உடலை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர். முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் இவர்களுக்கு புதிய அடையாள அட்டை, உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் பாலமுருகன் செய்திருந்தார்.