கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு : முதலமைச்சர் நேரில் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
வடகிழக்குப் பருவ மழையால் கடலூா் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சுமாா் 25 ஏக்கா் பரப்பில் நெல், மக்காச்சோளம், உளுந்து பயிா்கள் மற்றும் தோட்டப் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்து பல வீடுகள் இடிந்து சேதம் ஏற்பட்டு கடலூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பாா்வையிடுவதற்காக கடலூா் மாவட்டத்துக்கு இன்று வருகை தந்தார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், வேளாண் நலன் துறை அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த அரங்கமங்களம் ஊராட்சி மாருதி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள்,சேத பகுதிகளையும் முதல்வர் பார்வையிட்டார். கால்நடை இறப்பு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா என மொத்தம் இருபத்தி மூன்று பயனாளிகளுக்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் மதிப்புடைய நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஆடுர் அகரம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் சேதங்களை முதல்வர் பார்வையிட்டார். வேளாண் துறை அதிகாரிகளிடம் மழை பாதிப்பு மற்றும் பயிர் சேதங்கள் குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் கடலூா் மாவட்டத்தில் ஆய்வுப் பணியை முடித்த பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றார்.