30 ஆண்டுகளுக்கு மேலாக நீரில் நீந்திச் செல்லும் அவலம்; பொதுமக்கள் கடும் அவதி
சேத்தியாத்தோப்பு அருகே பாலம் இல்லாததால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீரில் நீந்திச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அகரபுத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வானமாதேவி, மணவெளி, அறந்தாங்கி,சென்னிநத்தம், சித்தமல்லி, பா.புத்தூர், கோவிந்தராஜன்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களுக்கு செல்வதற்கு மக்கள் உயிரை பணயம் வைத்து செங்கால் ஓடையை கடந்துதான் செல்கின்றனர். விவசாயிகள் இந்த ஓடை வழியாகத்தான் சென்ற வண்ணம் உள்ளனர்.
செங்கால் ஓடை தண்ணீரில் இறங்கி தான் அகரபுத்தூர் கிராமத்திலிருந்து வானமாதேவி, மணவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும், அங்கிருந்து அகரபுத்துர் கிராமத்திற்கு வருவதற்கும், வழியில் உள்ள இரண்டு செங்கால் ஓடைகளை கடந்து அதில் இறங்கி தான் வரவேண்டும்.
இந்த செங்கால் ஓடைகள் ஒவ்வொன்றும் ஆள் உயர ஆழம் உள்ளது. அதில் முழுவதுமாக தண்ணீர் நிரம்பி இருக்கும் நிலையில் கூட விவசாயிகள் வயல்வெளிக்கு செல்லும் போது இதன் உள்ளே இறங்கி செல்வதாலும்,உழவு வாகனங்களில் செல்லும்போது சேதமடைந்து சேற்றில் சிக்கியும் வருகிறது .
இதனால் பல வேளைகளில் வானமாதேவி, மணவெளி கிராமத்திற்கு செல்வதற்கு அகரபுத்தூர் கிராமத்திலிருந்து சுற்று வழியாக 7 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல சென்னை-கும்பகோணம் சாலை வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதிகாரிகள் இப்பகுதியினை ஆய்வு செய்து அகரபுத்தூர் மற்றும் மணவெளி ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு செங்கால் ஓடையில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும். தண்ணீர் கிராமத்திற்குள்ளும்,விவசாய விளை நிலங்களுக்குள்ளும் நுழையாதவாறு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் எனவும் இரு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் இந்த செங்கல் ஓடையை கடந்து தான் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.