சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல்

இறந்தவரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2021-08-19 04:11 GMT

சரியான சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி செல்லும் பொதுமக்கள்.

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி பி. முட்லூர் அருகே ஆணையாங்குப்பம் கிராமம் உள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் காலங்காலமாக தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்துவிட்டால்  சுடுகாட்டுக்கு  வயல்வெளி வழியாக தான் எடுத்துச் சென்று இறுதிச் சடங்கை செய்து வருகின்றனர்.

வயல்வெளி உரிமையாளரிடம் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக மழைக்காலங்கள் மற்றும் வயல்வெளிகளில் நெல் கதிர்கள் பயிரிடும் பொழுது இறந்தவர்களின் சடலத்தைக் கொண்டு செல்வது மிக சிக்கலாக உள்ளது. இறந்த உடலை எடுத்துச் செல்வதற்கு உரிய சாலை வசதி இல்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி கிராம மக்கள்.

முந்தைய அதிமுக அரசுக்கும், கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என்று கூறும் இப்பகுதி மக்கள், எங்கள் கிராமத்தினர்  மழைக்காலங்களில் யாராவது இறந்து விட்டால் வயல்வெளிகள் மற்றும் குட்டைகளை கடந்துதான் செல்ல வேண்டும் இது காலங்காலமாக நடந்து வருகின்றது. எங்கள் முன்னோர்கள் எங்க கிராமத்தில் மரணமடைந்து விட்டால் சுடுகாடு செல்வதற்கு உரிய சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தால் போதும் என கண்ணீர் சிந்துகின்றனர்.

21ம்  நூற்றாண்டில் சாலை வசதிகள் கிடையாது, என்பது வேடிக்கையாக இருந்தாலும் நாங்கள் பலமுறை நாங்கள் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என்ற கிராம மக்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த செய்தியின் வாயிலாக கோரிக்கையாக வைக்கின்றன.

Tags:    

Similar News