வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.;
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது.
இங்கு உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. காவல்துறைபாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.
வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற 10-ந்தேதி வரை பணி நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் சர்வதேச மையம் அமைக்கும் இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தொல்லியல் துறை துணை இயக்குனர் டாக்டர் சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் 6 பேர் இன்று வடலூர் வந்து வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.