வண்ணாரப்பேட்டை சுரங்க பாதை பணி: மார்ச் இறுதிக்குள் முடிய வாய்ப்பு
14 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் வண்ணாரப்பேட்டை சுரங்க பாதை பணி, மார்ச் இறுதிக்குள் முடியும் என அதிகாரிகள் கூறினர்;
பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும், மின்ட் மார்டன் சிட்டிக்கும் இடையே, கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது. தினமும் இது வழியாக 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, ரயில்வே 'கேட்' மூடப்படுகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, 2010ல் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என, தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
திட்ட விவரங்கள்
மொத்த நீளம்: 207 மீட்டர்
அகலம்: 6 மீட்டர்
செயல்படுத்தும் அமைப்புகள்:
ரயில்வே நிர்வாகம் (37 மீட்டர்)
சென்னை மாநகராட்சி (170 மீட்டர்)
பணிகள் துவங்கிய நிலையில், திடீரென கிடப்பில் போடப்பட்டது. பின் 2011ல், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கி பாதியில் நின்றது. மீண்டும் 2018ல் துவங்கிய பணி, கொரானா காலக்கட்டத்தில் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2022 அக்டோபரில் பணிகள் துவங்கின. சுரங்கப்பாதைக்கு அமையும் இடத்தின் அடியில் 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் எண்ணெய் குழாய்கள் செல்கிறது. இவற்றை மாற்றி அமைக்கும் பணி, ஏப்ரலில் முடிவடைந்தது. அதன் பின், எண்ணெய் குழாய்க்கு மேலே குடிநீர், கழிவுநீர், மழைநீர் வடிகால் பணி என, அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன.
இது குறித்து ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி கூறுகையில், தி.மு.க., அரசின் தொடர் முயற்சியின் காரணமாக, போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. மக்களவை தேர்தல் காரணமாக, இரு மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது. மழைநீர் வடிகால் பணிகளும், மின்சார கேபிள்கள் தனியாக பதிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் மாதாந்திர ஆலோசனை கூட்டங்களும், ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்தகட்ட பணிகளை விரைந்து முடித்து, வரும் 2025 மார்ச் 31ம் தேதிக்குள் சுரங்க பாதை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்
முக்கிய அம்சங்கள்
போக்குவரத்து நெரிசல் தீர்வு: ரயில்வே கேட் மூடல் காரணமாக ஏற்படும் நெரிசல் குறையும்.
உள்கட்டமைப்பு சவால்கள்: எண்ணெய், குடிநீர், கழிவுநீர், மின்சார கேபிள்கள் மாற்றியமைப்பு.
அரசியல் மாற்றங்கள்: பல்வேறு ஆட்சிகளின் கீழ் திட்டம் தொடர்ந்தது.
தற்போதைய நிலை: 85% பணிகள் முடிவடைந்துள்ளன.