ஆடை அவரவர் உரிமை; தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை- நடிகை ரோகினி
ஆடை என்பது அவரவர் உரிமை சார்ந்த விஷயம்; அதில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது என நடிகை ரோகினி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.;
சென்னை மாநகராட்சியின் அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட 98 வது வட்டத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி அயனாவரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
21 வயதான இளம் வேட்பாளரான பிரியதர்சினியுடன் இணைந்து அயனாவரம் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் , குடியிருப்புகளில் மேள தாளம் முழங்க நடந்து சென்று வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் நடிகை ரோகிணி வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களோடு இருப்பவர்களால் தான் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும். குடிநீர் ,பாதாள சாக்கடை , கழிவு நீர் பிரச்சனை, முதியோர் ஓய்வூதியம் போன்ற பிரச்சனைகளுக்கு சமரசமின்றி குரல் கொடுப்போர் கம்யூனிஸ்ட்கள் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான வேலைகளை செய்து வருகின்றனர்.
இந்த வேட்பாளர் இளம் வயதில் மக்களுக்கு பணி செய்ய முன் வந்துள்ளனர். ஆடை என்பது அவரவர் உரிமை சார்ந்த பிரச்சனை. அதை தடை செய்ய பிறருக்கு உரிமை யில்லை. கர்நாடகாவில் மாணவிகள் புர்கா அணிவது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். அதை தொடருவதில் என்ன சிக்கல் என கேள்வியெழுப்பினார். யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் எதுவும் நடக்கவில்லை என நடிகை ரோகிணி கூறினார்.