உலக சாதனை படைத்த 6 வயது சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்?

உலக சாதனை படைத்த 6 வயது மாணவி ஒருவர் முதல்வர் கைகளால் மட்டுமே விருது பெறுவேன் என்ற விருப்பத்துடன் 5 மாதமாக காத்திருந்து வருகிறார்.;

Update: 2023-01-30 02:30 GMT

உலக சாதனை படைத்த மாணவி கனிஷ்கா.

சென்னை ஆதம்பாக்கம் சுரேந்தர்நகர் 6 ஆவது தெருவைச் சேர்ந்த டெல்லி பாபு-வினோதினி தம்பதியின் 6 வயது மகள் கனிஷ்கா. வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் கனிஷ்கா இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு குழந்தை கனிஷ்காவின் அதித நினைவாற்றலை அறிந்த அவரது தாய் வினோதினி வீட்டிலேயே தனித்துவமான முறையில் அறிவுத்திறனுக்கு உதவும் வகையில் பல்வேறு பயிற்சிகளை அளித்தார்.

அதாவது, எதுகை மோனை சொற்கள், மீன்கள் பூச்சிகள், ஆசிய நாடுகளின் தேசிய விலங்குகள் போன்றவற்றை சிறிது சிறிதாக கற்றுத்தர ஆரம்பித்துள்ளார். கனிஷ்கா அதனை கற்கும் ஆர்வத்தில் இருந்து அதனை சாதனையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

அதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக (antonyms) என்று சொல்லக்கூடிய எதிர்மறைச் சொற்களை 1 நிமிடம் 27 வினாடிகளில் கூறிய மாணவி கனிஷ்கா இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இல் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு மீண்டும் 3 நிமிடம் 4 வினாடிகளில் 260 எதிர்மறைச் சொற்களும் ஒரு நிமிடத்தில் 40 கண்டுபிடிப்பாளர்கள் பெயர்களையும் கூறி மேலும் இரண்டு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட் சாதனையை மாணவி கனிஷ்கா பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையிலும் பங்கு கொண்டு 3 நிமிடம் 4.5 வினாடிகளில் 260 எதிர்மறைச் சொற்களை கூறி அந்த விருதையும் கனிஷ்கா பெற்றார். அதனைத் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள் காரணமாக இடைப்பட்ட அவரது சாதனை முயற்சியானது இணையதளத்தின் மூலமாக மெய்நிகர் வீடியோ காட்சி மூலம் சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

அதன் காரணமாக ஆசிய நாடுகளின் கொடிகள் மற்றும் அதனுடைய தேசிய விலங்குகள், 100 கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள், பறவைகளின் வகைகள், பூச்சிகளின் வகைகள், மீன்களின் வகைகள், விலங்குகளின் வகைகள் ஆகிய ஏழு பிரிவுகளில் வெற்றி பெற்று உலக சாதனையான (wonder Book of records) விருதையும் பெற்றார்.


இந்த நிலையில் அந்த விருதுக்கான சான்றிதழும் பதக்கமும் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னர் குழந்தையின் வீட்டிற்கு கொரியர் மூலம் டெலிவரி செய்யப்பட்டது. இருப்பினும் அந்த குழந்தை தான் பெற்ற இந்த உலக சாதனை விருதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கைகளால்தான் வாங்குவேன் என விரும்பினார்.

இதைத்தொட்ரந்து, மாணவி கனிஷ்காவின் சாதனை மற்றும் அவர் பெற்ற விருதுகள் விவரம் முதல்வர் ஸ்டாலினின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு நேரம் ஒதுக்க அனுமதி கேட்கப்பட்டது. இருப்பினும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

தனக்கு வந்த பார்சலை பிரிக்காமல் தற்போது வரை முதல்வரின் அனுமதி நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் குழந்தை கனிஷ்காவின் ஆசையை அதிகாரிகள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News