டூவீலரில் சாலையில் சென்ற பல் மருத்துவர் கீழே விழுந்து இறந்தார்
வேளச்சேரியில் டூவீலரில் சாலையில் சென்ற பல் மருத்துவர் கீழே விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
சாலை விபத்தில் இறந்த பல் மருத்துவர்
கன்னியாகுமரி, கோட்டரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷ்வா(28), இவர் வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருந்து வந்துள்ளார். பல் மருத்துவரான இவர், தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி நள்ளிரவு அதே பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று நண்பரை பார்த்துவிட்டு இரவு ஒரு மணி அளவில் தனது இருசக்கர வாகனங்களில் 3வது மெயின் ரோடு வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
முன்னதாக தகவல் அறிந்து கன்னியாகுமரியில் இருந்து வந்த ஜோஸ்வாவின் தாய் செலின் மனோகரதாஸ் மற்றும் சகோதரர் ஜொனத்தன் தாஸ் ஆகியோர் ஜோஸ்வாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
இதையடுத்து அவரின் சிறுநீரகம், கண்கள், இருதயம் உள்ளிட்ட உடலின் அனைத்து உறுப்புகளையும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்து தேவைப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கினர். சமீபத்தில் தான் ஜோஸ்வாவின் தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.