சென்னையில் மாநகர பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு
சென்னையில் மாநகர பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
சென்னை பெரும்பாக்கம் போக்குவரத்து பணிமனையில் இருந்து மாநகர பேருந்து தடம் எண் 119ஜி நேற்று மாலை 6.50 மணிக்கு புறப்பட்டது. பெரும்பாக்கம் முதல் கிண்டி வரை செல்லும் பேருந்தானது வரும் வழியில் குமரன் நகர் பேருந்து நிறுத்தத்தில் 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பேருந்தில் ஏறி படியில் தொங்கியவாறு பயணித்து வந்தார்.
ஓட்டுநர் கந்தசாமி மதுபோதை பயணியிடம் உள்ளே வருமாறு பலமுறை அறிவுறுத்தியுள்ளார். ஆனால் மது போதை ஆசாமியின் சேட்டை அதிகமானதால் வேளச்சேரி தண்டீஸ்வரம் பேருந்து நிலையத்தில் அவரை இறக்கி விட்டு பேருந்து புறப்பட தயாரான போது போதை ஆசாமி கல்லை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து பேருந்து ஓட்டுனர் முகமது ஷரிப் கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் மதுபோதை ஆசாமியை தேடி வருகின்றனர்.