ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறிவைத்து நள்ளிரவில் செயின் பறித்த கொள்ளையன்
நள்ளிரவில் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறிவைத்து செயின் பறித்து செல்லும் ஆந்திர கொள்ளையன் கைது, 15 சவரன் நகை பறிமுதல்.
சென்னை வேளச்சேரி, ராம்நகரை சேர்ந்தவர் சரஸ்வதி(84), இவர் தனது வீட்டில் ஜன்னல் ஓரம் படுத்திருந்த போது கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி மர்ம நபர் ஒருவர் ஜன்னல் ஓரம் கையை விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்.
இது குறித்து மூதாட்டி சரஸ்வதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தேடி வந்த நிலையில், கொள்ளையன் ஆந்திராவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
தலைமை காவலர் தாமோதரன், அச்சுதராஜ், முதல் நிலை காவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சம்பவத்தில் ஈடுபட்ட நகரி பகுதியை சேர்ந்த திருலோகசந்தர்(56), மற்றும் திருடிய நகைகளை அடகு வைத்த கடையின் உரிமையாளர் உகமாராம்(40), ஆகியோரை கைது செய்து 15 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ஆந்திராவில் இருந்து சென்னை வந்து நள்ளிரவில் ஜன்னல் ஓரம் தூங்குவோரை நோட்டமிட்டு கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை பறித்து செல்வதை வாடிக்கையாக கொண்டவன் என்பது தெரிய வந்தது. திருடிய நகைகளை ஆந்திராவில் உள்ள அடகு கடையில் விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இவர் மீது ஆதம்பாக்கம், பள்ளிகரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.