மசாஜ் சென்டரில் புகுந்து பணம், நகை பறித்த விவகாரம் :திமுக பிரமுகர் கைது

மசாஜ் சென்டரில் புகுந்து பணம், நகை பறித்த விவகாரத்தில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.;

Update: 2021-10-30 00:52 GMT

பைல் படம்

மசாஜ் சென்டரில் புகுந்து பட்டாக் கத்தியால் தாக்கி 5 சவரன் தங்க நகை, 30000 ரூபாய் பணம், 7 செல்போன்களை பறித்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைதான நிலையில் மேலும் இருவர் கைது.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் கிரியேட்டிவ் சலூன் அண்ட்  ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டரை தமிழரசன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த மசாஜ் சென்டரில், சம்பவத்தன்று  (26-10-2021) மதியம் சுமார் 12.50 மணியளவில் வெள்ளை உடை அணிந்த நபருடன் 5 பேர் கொண்ட கும்பல் பட்டாக் கத்தியுடன் உள்ளே புகுந்தனர்.

வந்த உடனேயே பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு ஸ்பா ஊழியரான அன்புரோஸ் பெர்னாண்டஸ் என்பவர் தரமறுத்துள்ளார். ஆத்திரமடைந்த கும்பல் தலையில் பட்டாக் கத்தியால் தாக்கிவிட்டு, அங்கிருந்த பெண்களின் கைப்பையில் இருந்த 30000 ரூபாய் பணம், 7 செல்போன்கள், மற்றும் 5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஒரு பெண்ணின் நெற்றியில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் இருவரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

செல்வதற்கு முன்பாக போலீசில் புகார் செய்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து வேளச்சேரி ஆய்வாளர் சண்முகசுந்தரத்திடம் மசாஜ் சென்டர் உரிமையாளர் தமிழரசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த பிரச்சனையை கூறியுள்ளார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து மர்ம குமபலை சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வந்த நிலையில் மணிகண்டன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரை மட்டும் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திமுகவை சேர்ந்த 177வது வட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜன்(எ) மணி(26), மற்றும்  பிரபாகரன்(எ) பன்னீர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைதாகியுள்ளனர். இதில் நாகராஜன்(எ) மணி மட்டும் திமுகவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News