சென்னை தரமணி எம்.ஜி.ஆர். சாலையில் சட்டவிரோத விளம்பர பேனர்கள்
சென்னை தரமணி எம்.ஜி.ஆர். சாலையில் சட்டவிரோத விளம்பர பேனர்கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.;
சென்னை தரமணி 100 அடி சாலை, எம்.ஜி.ஆர்.சாலை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளின் பக்கவாட்டிலும், மாடியிலும் இரும்பு கம்பிகளைக் கொண்டு 20, 30 அடி உயரத்திற்கு மேல் தயார் செய்து, அதில் இராட்சத விளம்பர பேனர்களை அனுமதியின்றி சில விளம்பர கம்பெனி தாரர்கள் வைத்திருக்கின்றனர்.
இது போன்ற விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் திசைமாறி விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விளம்பர பேனர் வைக்க தடை விதித்தது.
இருப்பினும் சில விளம்பர கம்பெனிகள் மாநகராட்சி இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோரை சரி கட்டி ஒவ்வொரு விளம்பர பேனருக்கும் மாதா மாதம் ஒரு பெரிய தொகையை லஞ்சமாக கொடுக்கின்றனர்.
இதனால் சமூக ஆர்வலர்கள் சமூக அக்கறையோடு போடப்படும் புகார்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இது போல் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு ரேடியல் சாலையின் நடுவே பேனர் வைக்கவிட்டதன் விபரீதம் தான் சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணை ஒரு குடும்பம் இழந்தது.
இப்படி அதிகாரிகளின் பணத்தாசையால் லஞ்சம் பெறுவதால் சட்டத்தை மீறுவோர் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அப்பாவி மக்கள் பேனரால் உயிரிழக்கிறார்கள்.
இதனை உடனடியாக மாநகராட்சி ஆணையர் முக்கிய பிரச்சினையாக கருத்தில் கொண்டு சென்னை முழுவதும் இருக்கும் இராட்சத பேனர்களை அகற்றிடவும், அதை வைத்தவர்கள் மீதும், லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.