திருவான்மியூர் மதுக்கடை அருகே நடந்த பிரபல ரவுடி கொலையில் 4 பேர் கைது
திருவான்மியூர் மதுக்கடை அருகே நடந்த பிரபல ரவுடி கொலையில் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.;
பைல் படம்
திருவான்மியூரில் மதுக்கடை அருகே சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து இரும்பு ராடால் தாக்கி, குத்திக் கொலை செய்த நான்கு பேர் கைது.
சென்னை திருவான்மியூர், ரங்கநாதபுரம், கெனால் பகுதியை சேர்ந்தவர் விக்கி(எ)விக்னேஷ்வரன்(35), இவர் திருவான்மியூர் ஜெயந்தி சிக்னலில் மதுக்கடை அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து இரும்பு ராடால் தாக்கிவிட்டு, குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற திருவான்மியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட விக்னேஷ் 'சி' பிரிவு சரித்திரபதிவேடு குற்றவாளி ஆவார், அவர் மீது திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய திருவான்மியூரை சேர்ந்த கோபி(21), அவரது தம்பி அஜீஸ்(எ)அஜித்(25), சூர்யா(26), விக்கி(எ)விக்னேஷ்(21), ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் கொலையான விக்னேஷ்வரன் என்பவர் அஜித்தை அடித்ததாகவும், அதற்கு முன்பாக கோபியை அடித்ததாகவும் அதன் முன் விரோதம் காரணமாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
கைதான கோபி மீது 10 குற்ற வழக்குகளும், அஜித் மீது 1 ஆதாய கொலை உள்ளிட்ட 3 குற்ற வழக்கும், விக்னேஷ் மீது ஒரு கொலை முயற்சி, திருட்டு, அடிதடி என 9 வழக்குகளும், சூர்யா மீது 2 அடிதடி வழக்குகளும் கோபி, மற்றும் விக்னேஷ் ஏற்கனவே இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதில் கோபி மற்றும் அஜித் சகோதரர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.