"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு – பாதுகாப்பாக" விழிப்புணர்வு நடைபயணம்

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர், வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே அணுக வேண்டும்;

Update: 2022-02-26 12:24 GMT

வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோர், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே செல்ல வேண்டும் என, வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை குடிபெயர்வோர் பாதுகாவலர் எம்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு – பாதுகாப்பாக" என்ற தலைப்பில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று நடைபெற்ற நடைபயணத்தை, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.


அப்போது பேசிய அவர், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய குடிபெயர்வோர் பாதுகாவலர் திரு.வெங்கடாசலம், முறையான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டுமே, அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் உதவி செய்ய முடியும் என்றார்.

முறையான முகவர்கள் மூலம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வோருக்கு மட்டுமே தமிழ்நாட்டிலும், புதுதில்லியிலும் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகம் உதவ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அங்கீகாரம் இல்லாத முகவர்கள் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு, குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகம் நேரடியாக தீர்வு காண இயலாது என்றும், அத்தகைய புகார்களை விசாரித்து காவல் துறை, நீதிமன்றம் போன்றவற்றின் உதவியுடன் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தினந்தோறும் சுமார் 30-க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த தவெங்கடாசலம், வெளிநாடு செல்வோருக்கான இத்தகைய சிரமங்களை தவிர்க்கும் வகையில், இந்த விழிப்புணர்வு நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் பட்டியலை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார். வெளிநாடு செல்பவர்களுக்கு அந்தந்த நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை, தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் – ESIC வழங்குவதாக, அதன் இயக்குனர் டாக்டர் ராஜமூர்த்தி இந்நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார்.

வெளிநாடு செல்வோர் நலன் தொடர்பான அனைத்துத் துறையினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது பாராட்டுக்குரியது என்றும், இத்துறையின் சேவைகள் பற்றிய தகவலை மக்கள் அறிந்து கொள்ள இது பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நடைபயணத்தில் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனர் பி.குருபாபு, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், பெசன்ட் நகர் நடைபயிற்சியாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News