இப்படிப்பட்டவரா EPS.. ஈரோடு இடைத்தேர்தல் ரகசித்தை போட்டுடைத்த அண்ணாமலை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து வருகிறது.

Update: 2024-07-06 06:45 GMT

எடப்பாடி பழனிச்சாமி பேசியது | Edappadi Palanisamy Latest Speech

ஏதோ அண்ணாமலை அவர்கள் பாஜக கட்சியின் தலைவராக வந்த பிறகுதான் அந்த கட்சி தமிழகத்தில் வளர்ந்திருப்பதாக அவர் ஒரு மாயத் தோற்றத்தை உண்டு பண்ண நினைக்கிறார். அது உண்மை இல்லை.

பாரதீய ஜனதா கட்சி, மாநில தலைவரான பிறகு, என்ன புதிய திட்டத்தை மத்திய அரசிலிருந்து கொண்டு வந்தார்... எதுவுமே கிடையாது. வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை, என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


2014ம் ஆண்டு பாஜக, அதிமுக தனித்தனியாக போட்டியிட்டது. அப்போது கோவையில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிமுக கட்சி வேட்பாளரை விட 42 ஆயிரம் வாக்குகள்தான் குறைவாக பெற்றிருந்தார். இப்போது 2024லே அண்ணாமலை அதே தொகுதியில் போட்டியிட்டார். அவர் திமுக வேட்பாளரை விட 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை குறைவாக பெற்றிருக்கிறார். அப்படி என்றால் பாரதீய ஜனதா எங்கே வளர்ந்திருக்கிறது. அதுபோல அந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட குறைவாகவே இந்த தேர்தலில் வாக்கு சதவீதத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

அ.தி.மு.க., விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணித்ததற்கான காரணத்தை, ஏற்கனவே அறிவித்துள்ளோம். இருப்பினும் வேண்டும் என்றே, அ.தி.மு.க.,வை அண்ணாமலை குறை சொல்லி பேசியிருக்கிறார். அவர் மெத்தப் படித்தவர்; மிகப் பெரிய அரசியல் ஞானி; அவரது கணிப்பு அப்படி இருந்திருக்கிறது.

விக்கிரவாண்டியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்காது. இருந்தபோதிலும் வேண்டுமென்றே திட்டமிட்டு, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் அ.திமு.க., குறித்து பாரதீய ஜனதா கட்சி, கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.


அது மட்டுமல்ல, ஏதோ இவர் (அண்ணாமலை) வந்த பிறகுதான், பாரதீய ஜனதா கட்சி, வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளார். அவர், தினமும் பேட்டி கொடுத்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். பேட்டியாலேயே வளர்ந்திருக்கிறார்.

அவர் பாரதீய ஜனதா கட்சி, மாநில தலைவராக வந்த போது, என்ன புதிய திட்டத்தை மத்திய அரசிலிருந்து கொண்டு வந்தார்?; எதுவுமே கிடையாது. வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதைதான், வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

100 நாட்களில் 500 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்கிற செய்தியை வைத்துதான் அவருக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இப்போது மத்தியில் அவர்களது ஆட்சி தான் வந்திருக்கிறது.


எதிர்பார்க்கிறோம் அவரது 100 நாட்களில் 500 திட்டங்கள் என்கிற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட மாநில தலைவர்கள் இருப்பதால்தான், முன்னதாக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாரதீய ஜனதா கட்சி, தற்போது கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.

இவ்வாறு, எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


அண்ணாமலை பேட்டி |  Annamalai BJP Latest Interview

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற ஒரு அருமையான கட்சியை சில தலைவர்கள் தங்களோட சுய லாபத்துக்காக கண்முன்னாலேயே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எல்லா மக்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களோட சுய லாபத்துக்காக, அதிகார வெறிக்காக தன்னோட இருக்கும் ரெண்டு பேரை மீடியாவில் பேசவைத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவை காப்பாற்றிவிடலாம் என நினைக்கிறார்.

தொண்டர்கள் எல்லாம் மாற்றுக்கட்சிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியை நோக்கி பெருமளவில் வர ஆரம்பித்துள்ளார்கள். அதனுடைய தாக்கம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதத்தை நாம் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான். டெல்லியில் பிரதமர் அருகே எடப்பாடி பழனிச்சாமி உட்கார வைத்த பின், சுய லாபத்திற்காக கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளனர். இக்கரைக்கு அக்கரை பச்சை என தன்னுடைய சுயலாபத்துக்காக செல்கிறார்கள். இதனால் தேர்தல் முடிவில் பல தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளனர். மக்கள் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளனர். இரண்டாவது பெரிய கட்சி டெபாசிட் இழந்து என்ன சாதனை படைத்துள்ளது. 134 வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அவர் எங்கிருந்து இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். ஒரு எம்பி கூட இல்லாமல் அவர் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும்.


கோயம்புத்தூரில் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று சட்டமன்ற தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது. ஜஸ்ட் மிஸ்ஸில் அவர்கள் டெபாசிட்டை கோவை நாடாளுமன்ற தொகுதியில் காப்பாற்றியிருக்கிறார்கள். இப்படி அதிமுக அழிந்து கொண்டிருக்கும் நிலையில் எனக்கு அறிவுரை கூறுவதா? கண்ணாடி அணிந்து அவரது முகத்தை நன்றாக பார்க்க வேண்டும்.

சீக்ரெட் என்ன? | Annamalai BJP Latest Speech

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று எத்தனை தோல்வி. சொந்த ஊர் எனக்கூறி ஈரோடு இடைத்தேர்தலில் நின்ற எடப்பாடி ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


ஈரோடு சீக்ரெட் அண்ணாமலைக்கு தெரியும்னு சொல்றாங்க. நான் சொல்கிறேன், இதே எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் ஈரோடு தொகுதியில் நான் நிற்கிறேன். இது என் அம்மாவின் ஊர். நான் நின்று பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறேன். ஈரோட்டில் வாக்குகள் பிரியக்கூடாது என என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். இதனால் அண்ணன் ஓபிஎஸ் இடம் இடைத் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று கூறுமாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதற்காக கண்ணியமாக, கம்பீரமாக ஓபிஎஸ் அண்ணன் ஒரு வார்த்தை கூட பேசாமல், இந்த கட்சியுடைய தொண்டர்கள் எல்லாம் ஒன்றாக ஓட்டு போடவேண்டும் என ஒதுங்கி நின்றார். எடப்பாடி பழனிச்சாமிக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

விக்கிரவாண்டியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை சரி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணிப்பதாக கூறிவிட்டு தற்பொழுது ஈரோட்டில் நடந்தது போன்ற குளறுபடி நடக்கும் என கூறி தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகிறார். இதே தேர்தல் ஆணையம் நடத்தக்கூடிய 2026 சட்டமன்ற பொது தேர்தலையும் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்துவிட்டு ஒதுங்கி இருப்பாரா என்கிற கேள்வியை திரு எடப்பாடி பழனிச்சாமியிடம் வைக்கிறேன்.


பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பாடுகள் இல்லை என்பதை தமிழக மக்கள் அனைவருமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவிற்கு அடிமையாக இருக்க பாஜக இல்லை. பிரதமரின் புற முதுகில் குத்தியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. நம்பிக்கையைப் பற்றி எனக்கும் பாரதி ஜனதா கட்சிக்கும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை காரணம் அவருக்கு அந்த அருகதை இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவரா எடப்பாடி பழனிச்சாமி. ஒரு சேர் போட்டு தலைவன் என்று ஒருவர் உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால் அவருடன் தொண்டர்கள் இருக்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் கரைய தொடங்கி விட்டார்கள் தேசியம் பக்கம் திரும்ப தொடங்கி விட்டார்கள்.

Tags:    

Similar News